வெள்ளவத்தை விபத்தில் பெண் பலி: இருவர் படுகாயம் தப்பியோடிய காரும் கைப்பற்றப்பட்டது
வெள்ளவத்தைப்பகுதியில் நேற்று முன்தினம் இடம் பெற்ற விபத்தில் படுகாயமடைந்த மூவரில் பெண்ணொருவர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வௌ்ளவத்தை காலிவீதியில் மஞ்சள் கோட்டினால் வீதியினை கடக்க முயன்ற மூவரை கார் மோதியமையினால் இவர்கள் படுகாயமடைந்திருந்தனர். படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பாலசூரியன் வாரணி (வயது29) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். ஜலின் ஜனாகி (வயது16), ஜலின் ஜனத் (வயது11) ஆகிய இருவருமே படுகாயமடைந்த நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் யுவதியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு 10மணியளவில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. மூவரும் மஞ்சள் கோட்டினால் வீதியைக் கடக்க முற்பட்டுள்ளனர். இவர்கள் கடக்க அவதானித்த வாகனமொன்று மஞ்சள்கோட்டிற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது அதற்கு அப்பால் வந்த கார் இந்த மூவரையும் மோதியுள்ளது. இதனால் பல அடிதூரத்திற்கு இந்த மூவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். மூவரையும் மோதிய கார் தப்பிச் சென்றதையடுத்து பொலிஸார் வேகமாக செயற்பட்டு குறித்த காரை கொழும்பு 4 தும்முல்ல சந்தியில் வைத்து மடக்கிப் பிடித்துள்ளதுடன் காரைச் செலுத்தி வந்த நபரையும் கைது செய்துள்ளனர். இது குறித்து வௌ்ளவத்தைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமரக்கோன் தகவல் தருகையில் நேற்று முன்தினம் இரவு வௌ்ளவத்தை விகாரமாவத்தை சந்தியில் அமைந்துள்ள மஞ்சள் கோட்டினால் உறவினர்களான மூவர் வீதியைக் கடந்து செல்கையில் வேகமாக வந்த கார் இவர்கள் மூவரையும் மோதிவிட்டு நிறுத்தாமல் சென்றுள்ளது. இதனையடுத்து அங்குள்ளவர்களின் உதவியுடன் படுகாயமடைந்த மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதன் போது சிகிச்சை பலனின்றி நேற்றுக்காலை வாரணி உயிரிழந்துள்ளார். ஏனைய இருவரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் யாழ்ப்பாணம் நல்லூர் வீதியைச் சேர்ந்தவர்கள் என்று ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து குறித்து தொடர்ந்தும் விசாரணை இடம் பெற்று வருகின்றது என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக